Sunday, March 23, 2008

அமெரிக்காவில் வள்ளலாரின் அன்னதான முறை


எவ்வுயிர்த் திரளும் தன் உயிர் எனவே எண்ணி இன்புறச்
செய்யும் வடற்பெரு வெளியின் வேந்தர் வள்ளற் பெருமான்,
வள்ளலார் அடிகள்!
அவரின் சித்தாந்தம், அவர் மறைந்தும் கடல் கடந்து
அமெரிக்க மண்ணில் வாழுகிறது!

"எவ்வகை ஆதரவும் இல்லாத ஏழையர் முகத்தை
இங்குள்ளவர் பலரும் எண்ணிப்பார்ப்பதில்லை.
வெள்ளை வேட்டிக் காரர்களுக்கு வேண்டியது கிடைத்துவிடும்.
ஆதலின் அக்கறை வைத்து ஆதரவற்றவர்கள் பசி நீக்க,
கூழினைக் கண்ணும் கருத்துமாக வார்த்து வாருங்கள்"
என்பது வடற் பெருவெளியின் வேந்தரான வள்ளலார்
பெருமானார் திருவாய் மலர்ந்தருளியது!


இதைச் சற்றே அமெரிக்காவுக்கு ஏற்றவாறு மாற்றிச்
சொன்னால்,"எவ்வகை ஆதரவும் இல்லாத ஏழையர்
முகத்தை இங்குள்ளவர் எண்ணிப்பார்ப்பதில்லை.
கோட்டு சூட்டுப் போட்டவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிடும்.
ஆதலின் அக்கறை வைத்து ஆதரவற்றவர்கள் பசி நீக்க ஓட்சு
கூழினையாவது/ரொட்டித் துண்டுகளையாவது கண்ணும்
கருத்துமாக வார்த்து வாருங்கள்" என்று வேண்டுமானால்
அமெரிக்கச் சூழலுக்கு மாற்றிச் சொல்லலாம்!

அமெரிக்கா என்றாலே பலருக்கு சுவர்க்க பூமியாகவும்,
கனவுலகமாகவும் கருதுகிறார்கள்.ஆனால் அமெரிக்காவில்
அது ஒன்றும் சுகமான படுக்கையல்ல, பலருக்கு முள்படுக்கை
என்பது அங்கிருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

அமெரிக்காவில் வீடற்றவர்கள், பராமரிப்பின்றி தவிக்கும்
குழந்தைகள், குழந்தைகளை வைத்துக்கொண்டு வீடின்றி
அல்லல் படும் தாய்மார்கள் எண்ணிக்கை நாளும்
பெருகிவரும் ஒன்றாக உள்ளது.

வாஷிங்டன் பெருநகரப் பகுதியில் மட்டும் தெருக்களிலும்,
அடைக்கலம் தரும் இடங்களில் வாழும் வீடற்றோர்
எண்ணிக்கை12,000.

கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் உறங்கி வாழும்
வீடற்றோரை மீட்டு அவர்கள் வாழ்க்கையைச் செப்பனிட
ஒரு நகரத்தில் வருடத்துக்கு 200மில்லியன் டாலர்
செலவழிக்கிறது அந்த நகரியம்!

33 விழுக்காடு வீடற்ற குழந்தைகள் தொகை வாழுகின்ற
அமெரிக்காவில் 18வயதுக்கு குறைந்த குழந்தைகளின்
விழுக்காடு மட்டும் 39 என்பது மிகக்கசப்பான உண்மை!

இன்னும் ஒவ்வொரு அமெரிக்க நகரங்களிலும் தெருவோர
பிச்சைக்காரர்கள், தெருக்களில் எப்படியெல்லாம் மன
உளைச்சலோடு அலைகிறார்கள், "காற்றினில் சருகாய் சீவனற்று
நெளியும் மனிதப் புழுக்களோ இறைவனை அறிவார்கள்?

அந்த ஏழைகளை பொருள் உடையவரின் சகோதரர் என்றார்
வள்ளலார்!

அந்தச் சகோதரருக்கு இரக்கம் காட்டி, பசி துடைத்துக் கண்ணீரை
மாற்றுவதே உண்மையான இறைவழிபாடு என்றார். அவர்களிடம்
இறைவனைப் பற்றிக் கூறுவதே பாவம் என்றார் விவேகனந்தர்!

வயித்துப் பசியோட இருக்கிற ஒருத்தனிடம்,"நீ கடவுளை வணங்கு.
அவர் உன்னைக் காப்பார், இரட்சிப்பார். உன் துயரங்கள் போகும்..என்று
ஒரு இறை நம்பிக்கையாளர் பிரசங்கிப்பாரேயானால் அவனுக்கு அதெல்லாம்
காதில ஏறாது. ப‌சி க‌ண்ணையும் காதையும் அடைக்கும்போது வ‌யித்தை
நெறைச்சாத்தான் க‌ண்ணும் தெற‌க்கும், காதும் தெற‌க்கும்.
இதான் வ‌ள்ளலார் போதித்த‌து. அதை அமெரிக்காவுல‌ சில‌ர்
செய்யுறாங்க‌.

வ‌ள்ள‌லாரின் சித்தாந்த‌த்தில் சிற‌கு முளைத்த‌ சில‌ர் இந்த‌ப்
ப‌சிப்பிணி போக்கும் அரும்ப‌ணியைச் செய்வதை நம் தமிழர்
தம் பண்பாட்டுச் சிதறலாகப் பார்க்கிறேன்!

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்".. என்று பசி வந்திடப் பத்தும்
பறந்து போவதைப் பற்றி ஒளவையார் அழகாகச் சொல்லியிருக்கிறார்.


பசியின் கொடுமையை உணர்ந்தவர்கள்தான் பசியைப் போக்க
எண்ணுவர். தமிழகத்திலே கறுப்பு காந்தி என்று வர்ணிக்கப்பட்ட
காமராஜர் அவர்கள் ஆரம்பபள்ளியில் மதிய உணவுத்திட்டத்தைக்
விரிவுபடுத்தி வழங்கினார்.

இன்றைக்கு ஆட்சிப்பொறுப்பிலே இருக்கிற கலைஞர் அவர்கள்
சிறு குழந்தைகூட வாய்விட்டு கேட்டுவிடும் பசிக்குதுன்னு,
ஆனா வறிய முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என்னசெய்வார்கள்?
என்று வயிற்றுப்பசி போக்கும் அறப்பணியை இங்கு செய்து வள்ளலாரின்
வாரிசாக இங்கு இருப்பதனால் பத்தும் பறந்துபோகாமல்
பாதுகாக்கப்படுகிறார்கள்.

இன்றைய நிலையில் இது அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும்
இந்துக்கோவில்கள் என்ற நிலையையும் சிறு நகரங்களில்கூட
வழிபாட்டுத்தலங்களை ஏற்படுத்தி வழிபடுகின்றனர்.

“இந்துக்களல்லாதவர்கள் இந்தக் கோவிலுக்குள் நுழைய தடை”
என்ற அறிவிப்புக்கள் ஏதும் இல்லாத‌ காரணத்தால் கோவில்களில்
நெற்றியில் குங்குமத்தோடோ திருநீரோடோ அமெரிக்க முகங்களையும்
சேர்ந்தே தரிசிக்க முடிகிறது.

இப்படித்தான் புலம்பெயர்ந்த தமிழர்களால் அவர்கள் கடைப்பிடிக்கும்
பண்பாடு இன்றைக்கு அமெரிக்காவில் அதன் குமுகாயத்தினரால்
(சமூகத்தினரால்) ஈர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு சொலவடை உண்டு.
"கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்".
இன்றைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருநாட்டிலும்
தங்கள் தராதரத்திற்கேற்ப கோவில்களை நிர்மானித்து
குடமுழுக்குச் செய்து தங்கள் பண்பாட்டிலிருந்து நழுவிவிடாமல்,
வழுவிவிடாமல் தங்கள் இல்வாழ்க்கையைச் சிறப்பித்து
வருகின்றார்கள்.

இது அமெரிக்காவிலும் அமரிக்கையாய் தொடர்கிறது.
இந்துமதப் பண்பாட்டில் இன்றைக்கு அமெரிக்கர்கள் இந்துவாக
மாறி வாழ்க்கை நடத்துவோர் ஓரிரு லட்சங்கள் இருக்கும்
என்று கருதப்ப‌டுகிறது.

அமெரிக்காவின் அதிமுக்கிய சுற்றுலா கேந்திரமான ஹவாய்
தீவுகளில் கப்பா எனுமிடத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில்
நிறுவப்பட்டுள்ள ஆசிரமம் இந்த துறவிகள் ஆசிரமம்! இந்த
ஆசிரமத்தை நிறுவியவர் ஒரு ஈழத்தமிழர்! சுப்ரமுனியசுவாமி!

உலகிலேயே சிவநடராஜரை மூல மூர்த்தியாகக் கொண்ட இக்கோயிலே
முதலாவது சிவன் கோவிலாகும்! இக்கோயிலில்தான் சிவனின் 108
தாண்டவ மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யபப்ப‌ட்டு 16டன் எடையுள்ள
மிகப்பெரிய நந்தியை உடைய இக்கோவிலின் எட்டுகாலப் பூசைகளையும்
ஆதீனத்துத் துறவிகள் செய்து வருகின்றனர்.

இந்த சன்மார்க்க இறைவன் கோவிலில் ஆகம வழிபாடுகளை
ஒருகுறைவுமில்லாமல் செய்துவருபவர்கள் மூன்று த‌மிழ‌ர் உட்ப‌ட‌,
அமெரிக்கா ம‌ற்றும் 6 வெளிநாடுகளைச் சார்ந்த அமெரிக்கர்கள்
முறையாக 12 வருடங்கள் குருகுலக் கல்வி கற்று சன்னியாசி தீட்சை
பெற்ற வெள்ளையர்கள்!

நம் தமிழ் பண்பாடு பிடித்த அமெரிக்கர்கள் இந்துக்களைவிட ஒருபடி
மேலாகவே ஈடுபாடு காட்டி அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதை
காணும்போது, அப்படி அவர்களை ஈர்த்துள்ளது, சமரச‌சன்மார்க்க
சிந்தனைகள் எனும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அமெரிக்காவில் எவரும் செய்ய முன்வராத அன்னதானத்தை
ஏழை எளியவர்களுக்குச் செய்வதிலாகட்டும், கோவிலில்,
நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படும் கலாச்சார பண்பாடாகட்டும்
இவர்களை மிஞ்ச நம்மவர்களால் கூட இயலாது.

நம்மவர்கள் இங்கிருந்து அங்குபோய் வேட்டியை மறந்து
சூட்டுகோட்டுக்கு தாவியும், சேலைகள் அணிவதைத் தவிர்த்து
ஜீன்ஸ், பாண்ட் என்று நடைஉடைஎன்று அனைத்திலும் மாறிவிட்டனர்;
அவர்களோ, சூட்டுகோட்டைவிட்டு வேட்டி சேலை என்று நம் பண்பாட்டை நிலைநிறுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.

நம்மவர்கள் நெற்றியில் திலகமிடுவதையோ, இராமம் போடுவதையோ
பார்க்க இயலாத நிலையில் அவர்கள் தாங்கள் மட்டுமல்ல தங்கள்
குழந்தைகளுக்கும் நம் கலாச்சாரம் பண்பாட்டை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்கள் என்பது மிக மகிழ்வான செய்தியல்லவா?

அமெரிக்க இந்து பக்தர்கள் வாரத்தில் இருமுறை தங்கள்
கோவில்கள் உண்டியல் மூலமும், நன்கொடையாளர்கள்
மூலமும் கிடைக்கும் உதவியைக்கொண்டு ஏழைகள் மற்றும்
உணவுத் தேவையுள்ளவர்களை நேரில் அணுகி அன்னதானம்
செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதற்காக தன்னார்வலர்கள் முன்னதாக கோவிலுக்கு வந்து அங்கேயே
உணவு தயாரித்தும், சிலர் நன்கொடையாக அளிக்கும் உணவை
பொட்டலங்களாகத் தயார் செய்தும் உதவுவர். அன்னதானம்
அளிக்க விரும்புபவர்கள் இந்தக் கோவிலில் இதற்காக உள்ள
தொடர்பு எண்ணில் பொறுப்பாளரை அழைத்துச் சொன்னால்
அவர்கள் பெற்று உணவுத் தேவையுள்ளோருக்கு வினியோகிப்பர்.

விசேட நாட்களில் கோவிலின் ஒரு பகுதியிலேயே ஏழைகள்
தேவையான உணவை தாங்களே எடுத்து உண்ணவும் வழி
செய்திருப்பார்கள். பசி எனும் கொடிய நோய் தீர்க்கும்
மருத்துவர்கள் இவர்கள்! இந்தப்பணி ஒரு புனிதப் பணி
என்பேன்; ஊரும் உலகமும் உதவத் தயங்கும் இவர்களை
ஆதரித்து அரவணைக்கும் வள்ளலான வல்லமைத் தாயாகப்
பார்க்கிறேன்; இவர்களின் தன்னலமற்ற செயலுக்கு உதவும்
பண்புள்ளவர்கள்,
பன் மடங்கு பெருகுக!

"பசித்தோரின் பசியாற்றுதல் என்னும் ஜீவகாருண்யமே
பேரின்ப வீட்டின் திறவுகோல்"பசியால் வருந்துகின்றவர்கள்
எந்த தேசத்தாராயினும், எந்த சமயத்தாராயினும், எந்த ஜாதியாராயினும்,
எந்த செய்கையராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம்,
செய்கை ஒழுக்கம், முதலானவைகளை எல்லாம் விசாரித்துக்
கொண்டிருக்காமல் பசியைப் போக்குவதை மட்டுமே குறிக்கோளாகக்
கொள்ள வேண்டும் என்கிற வள்ளலாரின் வாழ்வியல்த் தத்துவம்
அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படுவது உலகப் பண்பாட்டிற்குத்
தமிழ்ப் பக்தி இலக்கிய/இயக்கங்களின் பங்களிப்பாகவே
நான் பார்க்கிறேன்.


"உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின்
பங்களிப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக்கருத்தரங்கம்தனில்
8/3/08 அன்று நான் நிகழ்த்திய உரைச் சுருக்கம்!

..ஆல்பர்ட்,அமெரிக்கா.



பசித்தோர் புசிக்க சைவ அமுது தயார்!




தன்னார்வலர்கள் அமுது தயாரிக்கும் பணியில்!



தன்னார்வலர்கள் அமுது தயாரிக்கும் பணியில்!



பல்வேறு இடங்களிலிருந்து வந்துள்ள சேவையாளர்களின் ப்ளோரிடாவில் ஒன்றுகூடல்!



இந்துப்பண்பாடுகளில் திளைத்துள்ள அமெரிக்கர்கள் இசையோடு
திறந்தவெளியில் அமெரிக்க இந்து துறவிகளோடு மகிழ்ச்சித்
தருணங்களில் மூழ்கிக்கிடக்கும் பொன்பொழுதுகள் இவை!



சைவ உணவை சமரச சன்மார்க்க சங்கத்தினர் தரையிலமர்ந்து ஆற அமர‌
ரசித்து ருசித்து மகிழும் காட்சி!




சேலை கட்டுவது மட்டுமல்ல தமிழ்ப் பண்பாட்டையும்
சேர்த்தே ஊட்டும் தாய்!




இந்துப்பண்பாட்டில் முழுக்கமுழுக்க ஊறித் திளைத்த
அமெரிக்க இந்துக் குடும்பம்!



இந்து முறைப்படி வேதமந்திரங்களைச் சொல்லி திருமணம்
செய்துவைக்கும் அமெரிக்க-இந்து புரோகிதர்!





குவை,ஒரு குறையுமில்லாமல் ஆகமவழிபாடு நடக்கும்
சன்மார்க்க இறைவன் கோவில்!



அமெரிக்க இந்து துறவியான‌
சத்குரு போதிநாத வெய்லன் சுவாமிகள்



தெற்கு இல்லிநாய்ஸில் உள்ள‌ எட்வ‌ர்ட்வில் ப‌ல்க‌லையில்
மாண‌வ‌ர்க‌ள் ஆர்வ‌மாய் இந்தும‌த‌ம் குறித்த‌ வ‌குப்பில்!





மில்கின் ப‌ல்க‌லையில் இந்திய‌ப் பேராசிரிய‌ர் இந்துப்ப‌ண்பாடு குறித்த‌
விள‌க்க‌த்தை செவிம‌டுக்கும் அமெரிக்க‌ மாண‌வ‌ர்க‌ள்...!



ஆஸ்டின்,டெக்சாஸ் ப‌ல்க‌லையில்..!

-ஆல்பர்ட் ஃபெர்னான்டோ, விச்கான்சின், அமெரிக்கா.